Terror முகம் கொண்ட எறும்புகள்!

நாம் சாதாரண கண்களால் பார்க்க இயலாதவற்றை புகைப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்களுக்காக நடத்தப்படும் போட்டிதான் “Nikon Small World  Photomicrography”.   இவ்வாண்டு  வழமையைவிட அதிகமாக சமூக வலைத்தளங்களில் இந்த போட்டி பற்றி பேசப்பட்டமைக்கு    காரணம் இந்த  போட்டியில் வெற்றிவாகை சூட்டிய புகைப்படம் கொடுத்த அதிர்ச்சி என்றுகூட சொல்லலாம்.  உருவத்தில் சிறியதாக இருக்கும்  நம் மீது ஏறினால்,  தட்டி விட்டு நசுக்கி போடப்படும்   எறும்புகள் குறித்து நாம் பெரிய அளவில் கவனம் செலுத்தி இருக்க மாட்டோம். ஆனால் எறும்பின் முகத்தை மிக அருகில் எடுத்த புகைப்படம் வெளியாகி பலரை பீதியாக்கி உள்ளது. கோர பற்கள் மற்றும் ஆக்ரேஷாமான தோற்றத்துடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தாலே இனி எறும்பு பக்கத்தில் கூட நாம் போக மாட்டோம்.

இந்த புகைப்படத்தினை  லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ்  என்ற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். ஒரு குட்டியூண்டு எறும்புக்கு இப்படியொரு டெரர் முகமா? என்கிற ஆதங்கத்தோடு எறும்புகள் பற்றி கொஞ்சம் தேடிப்பார்த்தபோது ஏராளமான வியப்பூட்டும் தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? எறும்புகளுக்குக் கண்கள் கூட  தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, உணவருகே   சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்த்தபின்   அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து “ஃபெரமோன்” என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்லுமாம். இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றனவாம். 

www.rentokil-initial.lk

ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும். இடையே சில இடங்களில்  சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லையாம் .

130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் காலத்திற்கு முன்பாகவே உருவான எறும்பு அந்தாட்டிக்கா மற்றும் ஆட்டிக்  கண்டம் தவிர்த்து இந்த உலகம்பூராவும்  பறந்து வாழும் ஓர் உயிரினம். எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார்  10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றனவாம். எறும்புகள் அவற்றின் எடையை விட பல மடங்கு   அதிக எடையை தூக்கும் திறன் கொண்டவையாம். 

பொதுவாக இரண்டு வயிறுகளை கொண்டிருக்கும் எறும்புகளின்  ஒரு வயிறு தனக்கான உணவளித்தலுக்காகவும்  மற்றொன்று “Colony“ யில் உள்ள மற்ற எறும்புகளுடன் உணவினைப் பகிர்ந்துகொள்ளவும் பயன்படுகின்றனவாம். எறும்புகள் கூட்டமாக வாழும் பகுதி ஆங்கிலத்தில் “Colony“  எனவும் தமிழில் எறும்புப்புற்று  எனவும் அழைக்கப்படுவது நாம் அறிந்தவொன்றே. ஆனால் ஒவ்வொரு எறும்புப்புற்று வாசலிலும் நிற்கும் காவலாளி எறும்பு ஒவ்வொரு எறும்பாக முகர்ந்துபார்த்து அது தன்னுடைய காலனிக்கு சொந்தமான எறும்புதானா என்பதை உறுதி செய்தபின்புதான் உள்ளேயே அனுமதிக்குமாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

edition.cnn.com

எறும்புகள் இந்த உலகில் மொத்தமாக எத்தனை உள்ளதென்று கணக்கெடுக்க முடியாதபோதிலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மில்லியன் எறும்புகள் என்கிற ரீதியில் இருக்கலாம் என கருதப்படுகின்றது . மற்றைய பூச்சிகளைப்போல இவற்றுக்கு காதுகள் இல்லாதபோதிலும் தம்முடைய    முழஙகாலுக்கு கீழுள்ள துணை  உறுப்புக்களின்  உதவியுடன்   நிலத்தின் அதிர்வைக்கொண்டு பொருட்களை இனம்கண்டுகொள்கின்றனவாம் . ராணி எறும்புகள் ஒரே நேரத்தில் பல ஆண் எறும்புகளுடன் இணைந்து இனப்பெருக்கத்தினை மேற்கொள்கின்றபோதிலும் , இதில் சில ராணி எறும்புகள் மட்டும் ஆண் எறும்புகளின் துணையின்றி குளோனிங் முறையில் தானாகவே இனப்பெருக்கம் செய்துகொள்ளக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது  . இரண்டு எறும்புகள் சண்டையிட ஆரம்பித்தால் அதில் ஓன்று இறக்கும்வரைக்கும் அந்த சண்டை நீள்வதுடன், சில வகையான பங்கசு தாக்கத்தினால் எறும்புகள்கூட “ zombie எறும்புகளாக “ மாறி மற்றைய எறும்புகளை கொல்லும் தன்மையுடவையாக மாறிப்போகும் வாய்ப்புக்களும் உண்டாம்.

edition.cnn.com

சிலவகையான எறும்புகள் மற்றைய எறும்புகளின் கொலனிக்குள் அத்துமீறி  நுழைந்து அங்கிருக்கும் உணவுகள் மற்றும் எறும்பு முட்டைகளை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவதுண்டாம் . இப்படி கொள்ளையடித்து எடுத்துக்கொண்டு செல்லும்  எறும்பு முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சி எறும்புகளை காலம்பூராவும் அடிமைகளாக நடத்துமாம் அந்த கொள்ளைக்கார எறும்புகள்  என்கிறது எறும்பு பற்றிய ஆராச்சிகள் .

”MYRMECOLOGY”  என அழைக்கபடும் எறும்புகள் பற்றிய ஆராச்சியின்படி உலகில் மூன்றில் ஒரு பங்கு எறும்பு கூட்டம் அமேசான் காட்டில் இருப்பதாக அறியப்பட்டுள்ளதுடன்,   அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வேலையாள் எறும்புகள் மற்றும்  காவலாளி எறும்புகள்  3வருடம் வரையும், ஆண் எறும்புகள்  சில மாதமும் உயிர் வாழக்கூடியனவாம் . (பூச்சி இனங்களில் மிக வும் அதிக காலம் உயிர் வாழக் கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது )எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புகள் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்களாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Cover Image: www.sciencealert.com

Related Articles